பாக்கு திருட்டை தடுக்க தோட்டத்தில் கேமரா பொருத்திய விவசாயி
தாவணகெரே அருகே பாக்கு திருட்டை தடுக்க தோட்டத்தில் கேமரா பொருந்திய விவசாயியால் பரபரப்பு.
சிக்கமகளூரு:-
தாவணகெரே மாவட்டம் எலேபேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தீஷ். விவசாயி. அதே கிராமத்தில் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அதிகப்படியாக பாக்கு விளைவித்திருக்கிறார். தற்போது பாக்கு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் அந்தப்பகுதியில் கடந்த சில தினங்களாக பாக்கு திருட்டு நடந்து வருகிறது. இதனால் பாக்கு பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில், நந்தீஷ் பாக்கு திருட்டை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். இதற்காக அவர் தனது தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்தார். அதன்படி தோட்டத்தில் உள்ள முக்கிய நுழைவாயில் மற்றும் பாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் குடோன் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளார். தினமும் இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்த கேமராக்கள் திருட்டை தடுப்பதற்காக மட்டுமே பொருத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.