13 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய தந்தை
ஜீவர்கி அருகே 13 வயது மகளை, தந்தையே கர்ப்பிணியாக்கி கொடூர சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கலபுரகி:-
13 வயது சிறுமி
கலபுரகி மாவட்டம் ஜீவர்கி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 13 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி வசித்து வருகிறாள். அந்த சிறுமியின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அந்த சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவள் வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டாள்.
இதையடுத்து அந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமியிடம் டாக்டர்கள் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
வலைவீச்சு
அப்போது அந்த சிறுமி, தனது தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை கண்ணீர் மல்க கூறினாள். இதையடுத்து டாக்டர்கள் இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் ஜீவர்கி போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த அந்த சிறுமியின் தந்தை தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.