கர்நாடக அரசு பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் கண்டக்டர்; அழகான பெண் குழந்தை பிறந்தது
பெங்களூருவில் இருந்து சிக்கமகளூருவுக்கு சென்ற கர்நாடக அரசு பஸ்சில் கர்ப்பிணிக்கு பெண் கண்டக்டர் பிரசவம் பார்த்தார். அவருக்கு ஆழகான பெண் குழந்தை பிறந்தது.
பெங்களூரு:
நிறைமாத கர்ப்பிணி
அசாமை சேர்ந்தவர் பாத்திமா (வயது 22). இவரது கணவர் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயில் உள்ள காபி தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பாத்திமா கணவர் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் மதியம் பெங்களூருவில் இருந்து சிக்கமகளூரு நோக்கி புறப்பட்ட கர்நாடக அரசு பஸ்சில் (கே.எஸ்.ஆர்.டி.சி.) பயணித்தார். அவருடன் தனது மகன் மற்றும் மாமியாரையும் அழைத்து சென்றார்.
அந்த பஸ்சில் வசந்தம்மா (52) என்பவர் கண்டக்டராக இருந்தார். இந்த நிலையில் அரசு பஸ், ஹாசன் அருகே உதயாபுரா பகுதியில் சென்றபோது, பாத்திமாவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் அவரது மாமியாரும், பஸ்சில் பயணம் செய்த சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் அவரை பஸ்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த பெண் பிரசவ வலியால் துடித்ததால் பெண் கண்டக்டரான வசந்தம்மா, பாத்திமாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.
அழகான பெண் குழந்தை பிறந்தது
இதையடுத்து டிரைவரிடம் பஸ்சை சாலையோரம் நிறுத்த சொல்லிய வசந்தம்மா, பஸ்சில் இருந்து பயணிகளை கீழே இறக்கிவிட்டார்.
பின்னர் தான் வைத்திருந்த பெட்சீட்டை வைத்து மற்ற பெண் பயணிகள் உதவியுடன் பஸ்சில் வைத்தே அந்த பாத்திமாவுக்கு வசந்தம்மா பிரசவம் பார்த்தார்.
அப்போது அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே சக பயணிகள் ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். அந்த பெண், ஏழ்மையில் இருப்பதை அறிந்த வசந்தம்மா, தன்னிடம் இருந்த பணம் மற்றும் சக பயணிகளிடம் இருந்து பணம் வசூலித்து ரூ.1,500-ஐ அவரிடம் கொடுத்தார்.
இதையடுத்து அந்த பெண்ணும், அவரது பச்சிளம் பெண் குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் சாந்திகிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து பஸ்சை சுத்தம் செய்து 2 மணி நேரம் தாமதமாக அரசு பஸ் அங்கிருந்து சிக்கமகளூரு நோக்கி புறப்பட்டு சென்றது.
பாராட்டு
சாந்திகிராமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர்களை டாக்டர் பரிசோதனை செய்தார். அப்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தனர். அரசு பஸ்சில் பாத்திமாவுக்கு பிரசவம் பார்த்த பெண் கண்டக்டர் வசந்தம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உதவியாளராக பணியாற்றி உள்ளார். அதன்பிறகு தான் அரசு பஸ் கண்டக்டராக பணியில் சேர்ந்தார். பிரசவ வார்டில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து பாத்திமாவுக்கு அவர் பிரசவம் பார்த்தார்.
கர்ப்பிணி பெண்ணுக்கு மனிதாபிமானத்துடன் பிரசவம் பார்த்த கண்டக்டர் வசந்தம்மாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும் வசந்தம்மாவின் செயலுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் சத்தியவதியும் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளார்.