ஏரியில் நண்பருடன் அமர்ந்திருந்த பெண்ணுக்கு ரூ.1,000 அபராதம்
ஒயிட்பீல்டில் ஏரியில் நண்பருடன் அமர்ந்திருந்த பெண்ணுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த பெண் டுவிட்டர் மூலம் போலீஸ்காரர் மீது புகார் அளித்துள்ளார்.
ஒயிட்பீல்டு:
ரூ.1,000 அபராதம்
பெங்களூரு ஒயிட்பீல்டு குண்டனஹள்ளி பகுதியில் ஏரி ஒன்று உள்ளது. இந்த நிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த அர்ஷா லத்தீப் என்ற பெண் தனது நண்பர் ஒருவருடன் ஏரி பகுதியில் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர், ஏரி பகுதியில் அமரக்கூடாது என கூறி அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் ஏரியில் அமர்ந்ததற்காக ரூ.1,000 அபராதம் விதித்தார்.
அந்த பெண் அபராதம் கொடுக்க மறுத்தாலும், வலுக்கட்டாயமாக அவர்களிடம் இருந்து ரூ.1,000 வசூலித்து சென்றார். இந்த நிலையில் அந்த போலீஸ்காரர் குறித்து அர்ஷா லத்தீப், டுவிட்டர் மூலம் புகார் அளித்துள்ளார். அதனுடன் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் பதிவெண்ணையும் பதிவிட்டுள்ளார்.
தொந்தரவு செய்தார்
அந்த டுவிட்டர் புகாரில், நான் கடந்த 29-ந்தேதி குண்டனஹள்ளி ஏரி பகுதியில் எனது நண்பருடன் அமர்ந்து ஏரியில் அழகை ரசித்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் எங்களை செல்போனில் படம் எடுத்து, இங்கு அமர அனுமதி கிடையாது என்று தொந்தரவு செய்தார். நாங்கள் என்ன செய்தோம் என்று கேட்டபோது, அனுமதியின்றி இங்கு அமரக்கூடாது, நீங்கள் புகைப்பிடிக்கலாம் என்றார். எங்களிடம் சிகரெட் இல்லை என்றும், நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்கிறோம் என்றோம்.
ஆனால் அவர் தொடர்ந்து எங்களை பற்றி விசாரித்தார். கடைசியாக எங்களிடம் ரூ.1,000 வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தேர். எந்த தவறும் செய்யாத எங்களுக்கு ஏன் அபராதம் விதிக்க வேண்டும். ஆண் நண்பருடன் அமர்ந்திருந்ததால் எங்களை துன்புறுத்தி பணத்தை பறிக்க உரிமை இல்லை. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.