பெங்களூருவில் ரூ.12.31 கோடி அபராதம் வசூல்
போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.12.31 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.
பெங்களூரு:-
பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டிகள் மீது பல லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்குகளில் பல கோடி ரூபாய் அபராதம் செலுத்தாமல் வாகன ஓட்டிகள் இருந்து வந்தனர். இதையடுத்து, கடந்தமாதம் (பிப்ரவரி) 50 சதவீத தள்ளுபடியில் அபராதம் செலுத்தலாம் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்திருந்தனர். அப்போது 9 நாட்களில் 43.35 லட்சம் வழக்குகள் சம்பந்தமாக ரூ.126 கோடியே 87 லட்சம் அபராதம் வசூலாகி இருந்தது. இதையடுத்து, கடந்த 4-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை ஒட்டு மொத்தமாக 15 நாட்கள் 50 சதவீத தள்ளுபடியில் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தலாம் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்திருந்தனர்.
ஆனால் கடந்த முறை போன்று தற்போது அபராதம் செலுத்த வாகன ஓட்டிகள் முன்வரவில்லை. இதையடுத்து, கடந்த 4-ந் தேதியில் இருந்து 18-ந் தேதி வரை (நேற்று முன்தினம்) 4 லட்சத்து 25 லட்சத்து 91 வழக்குகளில் ரூ.12 கோடியே 31 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூலாகி இருப்பதாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.