தீயணைப்பு படை வீரர் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது


தீயணைப்பு படை வீரர் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் தீயணைப்பு படை வீரர் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் சிறுவன்-சிறுமி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

மைசூரு:-

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

மைசூரு நகர் பெங்களூரு-நீலகிரி ரோட்டில் பன்னிமண்டபம் பகுதியில் தீயணைப்பு குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மகாதேவா. இவர் தீயணைப்பு படை வீரராக உள்ளார். இவர் தனது மனைவி கீதா (34), மகள் மவுனா (10), மகன் மிதுன் (6) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் கீதா, பால் காய்ச்சுவதற்காக சமையல் அறைக்கு சென்றார். அப்போது அங்கு சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு இருந்ததாக தெரிகிறது.

இதனை கவனிக்காமல் கீதா, அடுப்பை பற்ற வைத்துள்ளார். அந்த சமயத்தில், பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், அந்த வீட்டின் ஒரு பகுதியும், பக்கத்து வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. மேலும் 2 வீட்டிலும் தீப்பிடித்து எரிந்தது.

10 பேர் படுகாயம்

கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதுடன், தீப்பிடித்ததால் 2 வீடுகளில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 2 வீடுகளிலும் பிடித்து எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர்.

இந்த விபத்தில் தீயணைப்பு படை வீரர் மகாதேவா, அவரது மனைவி கீதா, மகள் மவுனா, மகள் மிதுன் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த பாக்கியம் (62), சவிதா (38) ஆகியோர் உள்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவர்களில் 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் என்.ஆர். போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கியாஸ் கசிவு ஏற்பட்டிருந்ததை கவனிக்காமல் கீதா அடுப்பை பற்ற வைத்ததால் சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பிடித்தது தெரியவந்தது.

இதுகுறித்து என்.ஆர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story