பஸ் நிலையத்தில் கையில் அரிவாளுடன் பெண் ரகளை
கடைக்கு வாடகை பாக்கி கொடுக்காததால் கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதால் அரசு பஸ் நிலையத்தில் கையில் அரிவாளுடன் பெண் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மைசூரு:-
ரூ.1.80 கோடி வாடகை பாக்கி
மைசூரு சாத்தஹள்ளி பகுதியில் அரசு பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் வாடகைக்கு விட்டுள்ளது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தன்வீர்சேட்டின் ஆதரவாளர் சபி அகமது என்பவரின் மனைவி கடை வைத்துள்ளார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக கடைக்கு வாடகை செலுத்தவில்லை என தெரிகிறது. அவர் சுமார் ரூ.1.80 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளார். இதுபற்றி அறிந்ததும் கர்நாடக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், வாடகையை செலுத்த வேண்டும் என்று அவருக்கு நோட்டீசு அனுப்பினர்.
அரிவாளுடன் ரகளை
ஆனால் அவர் நோட்டீசுக்கு எந்த பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரிகள் பஸ் நிலையத்துக்கு சென்று அந்த கடையை காலி செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கையில் அரிவாளை வைத்து அதிகாரிகளை மிரட்டியதுடன் அங்கு ரகளையிலும் ஈடுபட்டார். அப்போது அவர் நாங்கள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள், கடையை காலி செய்தால் கொலை செய்து விடுவேன் என்றும் ஆக்ரோஷமாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் எச்சரிக்கை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் உதயகிரி போலீசார் விரைந்து வந்தனர். அப்போது அவர்கள் அந்த பெண்ணை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ. ஆதரவாளர் என்பதால் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.