பெங்களூருவில் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது; தூங்கிய கண்டக்டர் கருகி சாவு
பஸ் நிலையத்தில் இருந்த அரசு பஸ்சில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த கண்டக்டர் உடல் கருகி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
பேடரஹள்ளி:
பஸ்சை நிறுத்திவிட்டு தூங்கினார்
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் ஹலுரு கிராமத்தை சேர்ந்தவர் முத்தையாசுவாமி(வயது 45). இவர் பெங்களூருவில் வசித்து வந்தார். மேலும் அவர் பி.எம்.டி.சி.(அரசு) பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்றார். வேலையை முடித்துவிட்டு இரவு 10 மணி அளவில் பஸ்சை, லிங்கதீரனஹள்ளி பஸ் நிலையத்தில் டிரைவர் நிறுத்தினார். இதையடுத்து டிரைவர் அருகில் உள்ள அறைக்கு சென்றனர். அப்போது முத்தையா சுவாமி மட்டும் பஸ்சில் படுத்து தூங்கினார்.
அவர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவி பஸ் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. அதை உணராத முத்தையா சுவாமி தீயில் எரிந்து உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் காலையில் அறையில் இருந்த டிரைவர் சென்றுபார்த்தபோது பஸ் முழுவதுமாக எரிந்த நிலையில் இருந்தது. மேலும் பஸ்சின் சில பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து அவர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து பேடரஹள்ளி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
தீயில் எரிந்து
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், பஸ்சில் எரிந்த நிலையில் இருந்த கண்டக்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தினர். விசாரணையில், பணியை முடித்துவிட்டு முத்தையா சுவாமி, பஸ்சில் படுத்து தூக்கி கொண்டிருந்தபோது, பஸ் தீப்பிடித்ததும், அப்போது அவர் தீயில் எரிந்து உயிரிழந்ததும் தெரிந்தது.
இரவு நேரம் என்பதால் அதுகுறித்து யாருக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது. ஆனால் நின்ற பஸ்சில் தீ எப்படி பிடித்தது என்பது குறித்து தெரியவில்லை. டீசல் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பி.எம்.டி.சி. அதிகாரி
இதுகுறித்து பி.எம்.டி.சி. நிர்வாகத்தின் உள்துறை பாதுகாப்பு அதிகாரி ராதிகா கூறுகையில், 'லிங்கதீரனஹள்ளி பஸ் நிலையத்தில் ஊழியர்கள் தங்குவதற்கு என தனி அறை உள்ளது. சம்பவத்தன்று பஸ் டிரைவர் உள்பட பலரும் அங்கு சென்று தங்கி இருந்தனர். ஆனால் முத்தையா சுவாமி மட்டும் பஸ்சில் படுத்து தூங்கி உள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் அவர் உடல் கருகி உயிர் இழந்து உள்ளார்.
விபத்தில் சிக்கிய பி.எம்.டி.சி. பஸ் 2017-ம் ஆண்டு தான் வாங்கப்பட்டது. மேலும் அது நன்றாக பராமரிக்கப்பட்டு தான் வந்தது. எனினும், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது' என்றார். பணியை முடித்துவிட்டு பஸ்சில் தூங்கியபோது தீவிபத்து ஏற்பட்டு, கண்டக்டர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.