எரிந்த காரில் மனித எலும்பு கூடு; கொலையா? போலீசார் விசாரணை


எரிந்த காரில் மனித எலும்பு கூடு; கொலையா? போலீசார் விசாரணை
x

பைந்தூர் அருகே எரிந்த நிலையில் இருந்த காரில் மனித எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அது கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மங்களூரு;

எலும்பு கூடு

உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா ஹனபெரு பகுதியில் எரிந்த நிலையில் கார் ஒன்று நின்றது. அதை அந்த பகுதி மக்கள் கண்டனர். இதுகுறித்து அவர்கள் பைந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், காரை பார்வையிட்டனர்.

அப்போது அந்த கார் முற்றிலும் எரிந்து கருகி இருந்தது. மேலும், அந்த காரின் பின் இருக்கையில் மனித மண்டை ஓடு உள்பட எலும்பு கூடு இருந்தது. அதுவும் எரிந்த நிலையில் இருந்தது.

காரில் எலும்பு கூடாக இருந்தவரின் அடையாளம் முதலில் தெரியவில்லை. போலீீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். காரில் எரிந்த நிலையில் உள்ளவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

காருடன் எரித்தனரா?

மேலும், அந்த பகுதியில் உள்ளவர்களிடம் அதுகுறித்து விசாரித்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு காருடன் எரித்தனரா? அல்லது தீவிபத்தில் காரில் எரிந்து அதில் இருந்தவர் இறந்தாரா? எனவும் விசாரித்து வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். கார் எரிந்து அதில் இருந்தவர் எலும்பு கூடாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story