குட்டிகளுடன் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை; கொட்டகைக்குள் புகுந்து 5 ஆடுகளை வேட்டையாடியது
பத்ராவதி அருகே குட்டிகளுடன் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை கொட்டகைக்குள் புகுந்து 5 ஆடுகளை வேட்டையாடி சென்றது.
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா அரசனகட்டா, திக்கனஹள்ளி, ஹாத்ரிஹள்ளி பகுதிகளில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் அவைகள் கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு பெண் சிறுத்தை தனது குட்டிகளுடன் அரசனகட்டா கிராமத்திற்குள் புகுந்தது.
பின்னர் அந்த சிறுத்தை தனது குட்டிகளுடன் அந்த கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுபாய் என்பவரின் ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து அங்கிருந்த ஆடுகளை வேட்டையாடியது. இதில் அந்த சிறுத்தை மொத்தம் 5 ஆடுகளை வேட்டையாடியது. அதில் 3 ஆடுகளின் இறைச்சியை முற்றிலும் தின்றுவிட்டன. ஒரு ஆட்டின் உடலை பாசன கால்வாய் வரை இழுத்துச் சென்று போட்டுள்ளன.
ஒரு ஆட்டை வேட்டையாடி கொன்று உடலை கொட்டகையிலேயே விட்டுச் சென்றுள்ளன. இதுபற்றி அறிந்த மூதாட்டி மஞ்சுபாயும், கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கிராம மக்கள் இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர், அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது சிறுத்தை தனது குட்டிகளுடன் வந்து சென்றதற்கான கால் தடங்கள் அங்கிருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து வனத்துறையினரிடம் கிராம மக்கள் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அந்த சிறுத்தையை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.