திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி இழுத்து, 200 மீட்டர் வனப்பகுதிக்குள் உயிருடன் விட்டுச்சென்ற சிறுத்தை..!


திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி இழுத்து, 200 மீட்டர் வனப்பகுதிக்குள் உயிருடன் விட்டுச்சென்ற சிறுத்தை..!
x

உடனடியாக அங்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டு ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருப்பதி,

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ், பைக் மூலம் வந்து செல்கின்றனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக மலைபாதையில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் அலிப்பிரி நடைபாதையில் நடந்து சென்றனர். அப்போது-7வது மைலில் சென்றபோது திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், தாத்தா மற்றும் பக்தர்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்தனர். அதற்குள் சிறுத்தை, சிறுவனை கவ்விக்கொண்டு இருட்டில் மாயமானது.

இதனால் செய்வதறியாமல் திகைத்த சிறுவனின் பெற்றோர், போலீசார் மற்றும் பக்தர்கள் தங்கள் செல்போன்களில் டார்ச் அடித்தபடி வனப்பகுதிக்குள் தேடிச்சென்றனர்.

அப்போது சிறுவனின் அழுகுரல் கேட்டது. சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள புதர் அருகே சிறுவன் ரத்த காயத்துடன் கதறி அழுதுகொண்டிருந்தான். உடனடியாக அங்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டு ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறுத்தை கவ்விச்சென்றதில் சிறுவனின் கழுத்து, முகம், தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம்வழிந்தது. அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிறுவனின் கழுத்துப்பகுதியில் சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டது.

தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏழுமலையான் அருளால் தங்கள் மகன் தப்பினான் என்று பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அலிபிரி மலைப்பாதையில் கடந்த 2008ம் ஆண்டும் இதேபோன்று 13 வயது சிறுமியை சிறுத்தை கவ்விச்சென்று பின்னர் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை தப்பி சென்ற பாதையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் வனப்பகுதிக்குள் தப்பி சென்ற சிறுத்தையை பிடித்து வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story