2 பசு மாடுகளை அடித்த கொன்ற சிறுத்தை
கொள்ளேகால் அருகே 2 பசுமாடுகளை அடித்து சிறுத்தை கொன்றது. கூண்டு வைத்து பிடிக்ககோரி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளேகால்:-
சிறுத்தை நடமாட்டம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சந்தேமாரஹள்ளியை அடுத்த பானா கிராமம் வனப்பகுதியொட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள், கிராமத்திற்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக கால்நடைகளை வேட்டையாடிவிட்டு செல்கின்றன.
இதனால் அதிருப்தியடைந்த அந்த கிராம மக்கள் சிறுத்தைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் பானா கிராமத்திற்குள் மீண்டும் சிறுத்தை நடமாடியதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பசுமாடுகளை கொன்றது
சந்தேமாரஹள்ளியை அடுத்த பானா கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். விவசாயியான இவர், வீட்டின் அருகே 2 பசுமாடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று அந்த 2 பசுமாடுகளையும் அடித்து கொன்றது. மேலும் அந்த மாடுகளின் இறைச்சியை சாப்பிட்டுவிட்டு, அதை வனப்பகுதிக்குள் இழுத்து செல்ல முயன்றது. ஆனால் முடியவில்லை.
இதையடுத்து அந்த பசுமாடுகளை அங்கே போட்டுவிட்டு சென்றது. இந்நிலையில் நேற்று காலை ஜெயசங்கர் எழுந்து வந்து பார்த்தபோது, பசு மாடுகள் செத்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இது குறித்து சந்தேமாரஹள்ளி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
பொதுமக்கள் போராட்டம்
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள் சிறுத்தைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியவில்லை. எனவே அந்த சிறுத்தைகளை கூட்டு வைத்து பிடிக்கவேண்டும் என்று கூறினர்.
இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.