எச்.டி.கோட்டை அருகே மாடு ,ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை
எச்.டி.கோட்டை அருகே மாடு, ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.
மைசூரு
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா நீகல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. விவசாயி. இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது கொட்டகையில் இருந்து ஆடுகள் கூச்சலிடும் சத்தம் கேட்டது.
கேட்டு வெங்கடசாமி வெளியே ஓடி வந்து பார்த்தார். அப்போது கொட்டகையில் இருந்த 3 ஆடுகள் இறந்து கிடந்தது. அதாவது கொட்டகைக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து 3 ஆடுகளையும் அடித்து கொன்றிருப்பது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் எச்.டி.கோட்டை போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுத்தை ஆடுகளை தாக்கி கொன்றிருப்பது தெரியவந்தது. இதேபோல நீகல்லை அடுத்த சுன்னக்கல் முந்தி கிராமத்தை சேர்ந்த நாகேகவுடா என்பவரின் மாட்டு கொட்டகைக்குள் புகுந்த சிறுத்தை மாடு ஒன்றை அடித்து கொன்றுவிட்டு சென்றது.
இந்த இரண்டு சம்பவத்தால் பீதியடைந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளை சுற்றி வளைத்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மாடு, ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு அரசு சரியான இழப்பீடு தொகை வழங்கவேண்டும்.
மேலும் மாடு, ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்திருப்பதாகவும், விரைவில் அந்த சிறுத்தையை பிடித்து விடுவதாகவும் கூறினார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.