கார்கள் உள்பட 5 வாகனங்கள் மீது மோதிய சொகுசு கார்
பெங்களூரு நிருபதுங்கா சாலையில், சொகுசு கார் ஒன்று 3 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் செல்போன் கடை உரிமையாளர் பலியானார்.
பெங்களூரு:-
செல்போன் கடை உரிமையாளர்
பெங்களூரு எச்.பி.ஆர். லே-அவுட்டில் வசித்து வந்தவர் மாஜித் கான்(வயது 39). இவர் அப்பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று காலையில் இவர் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் நிருபதுங்கா சாலையில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மாஜித் கான் ஓட்ட, அவரது நண்பர் பின்னால் அமர்ந்திருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் அதிவேகமாக வந்தது. திடீரென அந்த கார் மாஜித் கானின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த கார் நிற்காமல் 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள் மீது மோதி சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி நின்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாஜித் கான் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமானது...
அவரது நண்பர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மேலும் சொகுசு கார் மோதியதால் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதம் அடைந்தன. இன்னொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரின் கால் முறிந்தது. இதையடுத்து அப்பகுதியில் திரண்ட மக்கள், காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக செயின்ட் மார்த்தாஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் அவர்கள் விபத்துக்கு காரணமாக காரையும் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த அல்சூர் கேட் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் காரில் மேற்கொண்ட சோதனையில் சிவமொக்கா மாவட்டம் சாகர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான ஹாலப்பா ஆச்சாரின் பாஸ் இருந்தது. இதனால் அந்த கார் ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அல்சூர் கேட் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
.........