பெண் உயிருடன் எரித்து கொன்ற வழக்கில் வியாபாரிக்கு தூக்கு தண்டனை
பெண் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாபாரிக்கு தூக்கு தண்டனை விதித்து விஜயாப்புரா கூடுதல் செசன்சு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
விஜயாப்புரா:-
பெண் எரித்து கொலை
விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி தாலுகா கொகடனூரு கிராமத்தை சேர்ந்தவர் சமஷா. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சமஷாவுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் அக்பர் பாஷா பக்வானுக்கும் இடையே சாதாரண பிரச்சினைக்கு தகராறு ஏற்பட்டு இருந்தது. அப்போது சமஷாவை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்திருந்தார்.
அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி தனது மகளுடன் சமஷா வீட்டில் தனியாக இருக்கும் போது திடீரென்று அக்பர் பாஷா உள்ளே புகுந்தார். பின்னர் சமஷா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். மகளின் கண்எதிரேயே அவர் உயிருடன் எரிந்து பலியானார். இதுகுறித்து சிந்தகி போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்பர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வியாபாரிக்கு தூக்கு தண்டனை
இந்த கொலை தொடர்பான வழக்கு விஜயாப்புரா முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி சதீஸ் எல்.பி. முன்னிலையில் நடைபெற்று வந்தது. சிந்தகி போலீசார், அக்பர் பாஷாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சதீஸ் எல்.பி. தீர்ப்பு கூறினார்.
அப்போது சமஷாவை அக்பர் பாஷா உயிருடன் எரித்து கொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளது. எனவே அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. கொலையான சமஷாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று நீதிபதி சதீஸ் எல்.பி. பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளார்.