காருக்கு அடியில் கிடந்த, பிறந்து ஒரு நாள் ஆன பச்சிளம் ஆண் குழந்தை வீசி சென்றது யார்? போலீஸ் விசாரணை
மங்களூருவில் காருக்கு அடியில் கிடந்த பிறந்து ஒரு நாள் ஆன பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர். அந்த குழந்தையை வீசி சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களூரு;
பச்சிளம் ஆண் குழந்தை
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு தொக்கொட்டு அருகே காபிக்காடு பகுதியை சேர்ந்தவர் அமர். இவர் வீட்டின் வெளியே தனது காரை நிறுத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் ேநற்று காலையில் அமர், வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அப்போது ெவளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு அடியில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.
இதனால் அமர், காருக்கு அடியில் பார்த்துள்ளார். அப்போது அங்கு வெள்ளை துணியால் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், காருக்கு அடியில் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டனர். அது ஆண் குழந்தை என்பது தெரியவந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதுகுறித்து அவர் உடனடியாக உல்லால் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அந்த பச்சிளம் குழந்தை பிறந்து ஒரு நாள் தான் ஆனது தெரியவந்தது.
பச்சிளம் ஆண் குழந்தையை காருக்கு அடியில் வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.