கோவிலில் தலை வணங்கி சாமி கும்பிட்டு விட்டு பணப்பெட்டியை திருடி சென்ற நபர்
மத்திய பிரதேசத்தில் கோவிலில் திருட சென்ற நபர் சாமியை கண்டதும் தலை வணங்கி கும்பிட்டு விட்டு விலையுயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளார்.
ஜபல்பூர்,
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் சுகா என்ற கிராமத்தில் பெண் தெய்வத்திற்கான கோவில் ஒன்று உள்ளது. கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.
இந்த கோவிலுக்கு நபர் ஒருவர் சட்டையில்லாமல், முகமூடி அணிந்து கொண்டு திருட சென்றுள்ளார். கோவிலின் திரை சீலையை விலக்கி விட்டு உள்ளே நுழைந்த அவர், தனக்கு முன்னே பெண் தெய்வம் காட்சி கொடுப்பது கண்டு சற்று திகைத்து நின்றார்.
இதன்பின்னர், தலை வணங்கி சாமி கும்பிட்டு விட்டு கோவிலில் இருந்த உண்டியல் பெட்டியை தூக்கி கொண்டு சென்றுள்ளார். இந்த காட்சிகள் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளிவந்து வைரலாகி வருகின்றன.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்த நபர், கோவிலின் இரு பெரிய மணிகள் மற்றும் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்த பொருட்கள் உள்ளிட்டவற்றையும் திருடி சென்று விட்டார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி டுவிட்டரில் விமர்சனம் வெளியிட்ட ஒருவர், கோவிலின் கருவறையில் இருந்து பக்தர் ஒருவர் திருடி செல்கிறார் என்றால், அது திருட்டு ஆகாது. தன்னுடைய கடின சூழலில், அந்த பக்தர் இறைவனிடம் உதவி கேட்டுள்ளார் என தெரிவித்து உள்ளார்.
அதில் மற்றொருவர், அந்த திருடர் ஒரே நேரத்தில் தனது இறை நம்பிக்கையை உயிரோட்டத்துடன் வைத்து கொண்டதுடன், தனது தொழிலையும் செய்து இரட்டை பலன்களை பெற்றுள்ளார் என தெரிவித்து உள்ளார்.