தேர்தலில் போட்டியிட, வேலையை ராஜினாமா செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட வேண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு உண்மையிலேயே பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபை தேர்தல்
கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும், மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ஆயத்தமாகி வருகின்றன.
பா.ஜனதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க அக்கட்சியினர் இப்போதே பம்பரமாக சுழல ஆரம்பித்துவிட்டனர். அதற்கு ஏற்றார்போல் பிரதமர் நரேந்திர மோடியும் அடிக்கடி கர்நாடகம் வந்த வண்ணம் உள்ளார்.
வேட்பாளர் பட்டியல்
அதுபோல் காங்கிரஸ் கட்சியினரும் சூறாவளியைபோல் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார்கள். இதற்கிடையே ஜனதா தளம்(எஸ்) கட்சி தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து விட்டது. இதனால் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா சார்பில் டிக்கெட் பெற அக்கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் கட்சிகளின் மீது அதிருப்தி கொண்டவர்கள் மாற்று கட்சிகளிலும் சேர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட டிக்கெட் பெற வேண்டும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
ராஜினாமா
விஜயாப்புரா மாவட்டம் நாகடானா பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர நாயக். கடந்த 2010-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த இவர் தற்போது பாகல்கோட்டையில் மாவட்ட லோக் அயுக்தா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவருக்கு நாகடானா தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இன்ஸ்பெக்டர் மகேந்திரநாயக் நேற்று தனது பணியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் பா.ஜனதாவில் இணைந்துள்ளார். தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. ஆனால் அவருக்கு உண்மையிலேயே பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.