மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ்காரர் டிராக்டர் ஏற்றி கொலை
கலபுரகி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி படுகொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:-
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் ஜேவர்கி தாலுகா நிலோகி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் மயூர் சவுகான்(வயது 51).
சட்டவிரோத மணல் கடத்தல்
ஜேவர்கி தாலுகாவில் பீமா ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளது. இந்த சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க போலீசாரும், அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் மணல் கடத்தல் மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், பீமா ஆற்றில் இருந்து சட்ட
விரோதமாக டிராக்டரில் மணல் அள்ளி செல்வது பற்றி நிலோகி போலீசாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ்காரர் மயூர் சவுகான், மற்றொரு போலீஸ்காரர் பிரமோத் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அப்போது குல்லூர் சோதனை சாவடி அருகே ஒரு டிராக்டரில் மணல் ஏற்றிக் கொண்டு சிலர் செல்வதை போலீஸ்காரர்கள் பார்த்தனர்.
டிராக்டர் ஏற்றி போலீஸ்காரர் கொலை
அந்த டிராக்டரை நிறுத்தும்படி போலீசார் டிரைவரிடம் கூறினார்கள். ஆனால் அவர் டிராக்டரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். இதையடுத்து, டிராக்டரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ்காரர்கள் மயூர் சவுகான், பிரமோத் சென்றார்கள். சிறிது தூரத்தில் வைத்து டிராக்டரை 2 போலீஸ்காரர்களும் மடக்க முயன்றனர். அந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டரை டிரைவர் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போலீஸ்காரர் மயூர் சவுகான் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு போலீஸ்காரர் பிரமோத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நிலோகி போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயூர் சவுகானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மேலும் கலபுரகி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இஷா பண்ட்டும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதன்பிறகு, மயூர்சவுகானின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கலபுரகியில் பரபரப்பு
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு இஷா பண்ட் நிருபர்களிடம் கூறுகையில், 'சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க சென்ற நிலோகி போலீஸ்காரர் மயூர் சவுகான் உயிர் இழந்திருக்கிறார். டிராக்டர் மோதியதில் அவர் கீழே விழுந்து உயிர் இழந்துள்ளார். திட்டமிட்டு டிராக்டரை ஏற்றி கொலை செய்தார்களா?, மணல் கடத்தி சென்ற டிராக்டரை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதி மயூர் சவுகான் பலியானாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது', என்றார்.
இந்த சம்பவம் குறித்து நிலோகி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் மயூர் சவுகான் சாவுக்கு
காரணமாக சித்தப்பாவை கைது செய்துள்ளனர். மற்றொருவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ்காரர் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கலபுரகியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணல் கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை
மந்திரி பிரியங்க் கார்கே உத்தரவு
மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ்காரர் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கலபுரகி மாவட்ட பொறுப்பு மந்திரி பிரியங்க் கார்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
ஜேவர்கி தாலுகாவில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற நிலோகி போலீஸ்காரர் மயூர் சவுகான் உயிர் இழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. போலீஸ்காரர் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஜேவர்கியில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தும்படியும் மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். போலீஸ்காரர் மயூர் சவுகான் குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும். கலபுரகியில் மணல் கடத்தலை தடுப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் கூடிய விரைவில் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளேன்'.
இவ்வாறு அவர் கூறினார்.