தனியார் சொகுசு பஸ்சில் விஷம் குடித்து தூங்கிய காதல் ஜோடி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தனியார் சொகுசு பஸ்சில் காதல் ஜோடி விஷம் குடித்து தூங்கினர். இதில், இளம்பெண் உயிரிழந்தார். வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹாவேரி:-
காதலுக்கு எதிர்ப்பு
பாகல்கோட்டையை சேர்ந்தவர் அகில். இவர் அங்குள்ள கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். இவரும் பாகல்கோட்டையை சேர்ந்த ஹேமா (வயது 20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஹேமாவும், அகிலும் காதலை கைவிடாமல் தொடர்ந்து பேசி, பழகி வந்துள்ளனர்.
அவர்களின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வந்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.
விஷம் குடித்தனர்
அதன்படி அவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னா் அவர்கள் மும்பை செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் சொகுசு பஸ்சில் பயணித்தனர். இந்த நிலையில், தங்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொள்ள ஹேமாவும், அகிலும் முடிவு செய்துள்ளனர். அதன்படி பஸ்சில் வைத்தே, 2 பேரும் விஷத்தை குடித்துவிட்டு தூங்கிவிட்டனர்.
இந்த நிலையில் அந்த பஸ், ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சாலகேரி சுங்கச்சாவடி அருகே இரவு உணவுக்காக நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சாப்பிட சென்றனர்.
இளம்பெண் சாவு
ஆனால், ஹேமாவும், அகிலும் சாப்பிட செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பஸ் ஊழியர், அவர்களின் படுக்கைக்கு சென்று 2 பேரையும் எழுப்பி உள்ளார். நீண்ட நேரம் எழுப்பியும் அவர்கள் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சக பயணிகள் உதவியுடன் உடனடியாக 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராணிபென்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது 2 பேரும் விஷம் குடித்திருப்பதும், அதில் இளம்பெண்ணான ஹேமா உயிரிழந்ததும் தெரியவந்தது.
மேலும் மயக்க நிலையில் உள்ள அகிலுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ராணிபென்னூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.