ஒவ்வோர் ஆளையும் அழைக்க என தனி பாடல்... விசித்திர கிராமம்
மேகாலயாவில் ஒவ்வோர் ஆளையும் தனித்துவம் வாய்ந்த ஒரு பாடல் கொண்டு அழைக்கும் விசித்திர கிராமம் உள்ளது.
கோங்தாங்,
மேகாலயாவில் கிழக்கு காசி ஹில்ஸ் என்ற மாவட்டத்தில் கோங்தாங் என்ற கிராமம் உள்ளது. தலைநகர் ஷில்லாங்கில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
இந்த கிராமத்திற்கு உள்ள சிறப்பு என்னவென்றால், அவர்கள் ஆள் ஒருவரை கூப்பிட வேண்டுமென்றால், அதற்கு அவர்களின் பெயரை சொல்லி கூப்பிடுவது கிடையாது.
அதற்கு மாறாக, அந்த ஆளுக்கு என்று தனித்துவம் வாய்ந்த அல்லது சிறப்பு பெற்ற ஒரு பாடல் இருக்கும். அந்த பாடல் பாடியே அவரை அழைக்கிறார்கள். இதனால், இந்த கிராமம் விசில் கிராமம் என அழைக்கப்படுகிறது.
இந்த பாடல் ஜிங்கர்வாய் லாவ்பெய் என அழைக்கப்படுகிறது. இதற்கு அன்னையின் அன்பு பாட்டு என பொருள். கிராமவாசிகள் சக மக்களிடம் ஒரு தகவலை தெரிவிப்பதற்கும் இந்த பாடலை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.
இந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு 2 பெயர்கள் இருக்கும். ஒன்று வழக்கம் போல் உள்ள பெயர். மற்றொன்று பாடலுக்கான பெயர். இந்த பாடலுக்கான பெயரும் 2 வடிவம் பெற்று உள்ளது.
ஒன்று நீண்ட பாடல். மற்றொன்று சிறிய பாடல். இந்த சிறிய பாடல் பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படுகிறது. கோங்தாங் கிராமத்தில் 700 பேர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் 700 வெவ்வேறு பாடல்கள் உள்ளன.
இதுபற்றி கிராமவாசியான பைவ்ஸ்டார் கோங்சித் என்பவர் கூறும்போது, ஒரு குழந்தை பிறக்கும்போது, அதற்கான பாடலை அதன் தாயார் இசைத்து உருவாக்குகிறார். ஒரு கிராமவாசி மரணம் அடைந்து விட்டால், அந்த பாடல் அவருடன் மரணித்து விடும். அதன்பின்னர் அந்த பாடல் ஒருபோதும் மீண்டும் பயன்படுத்தப்படாது.
எங்களுக்கு என்று சொந்தத்தில் தனியாக பாடல்கள் உள்ளன. அந்த பாடல்களை தாயார் உருவாக்குவார். இதனை நீண்ட பாடல், சிறிய பாடல் என இரு வடிவில் பயன்படுத்துகிறோம். எங்களது கிராமத்திற்குள் அல்லது வீட்டுக்குள் சிறிய பாடலை பயன்படுத்துவோம். எனக்கான பாடலை எனது தாயார் உருவாக்கினார்.
இந்த நடைமுறை எங்களது கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. எப்போது அது தொடங்கியது என எங்களுக்கு தெரியாது. ஆனால், இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என கூறியுள்ளார்.
இப்போது இவர்களை பார்த்து மேகாலயாவில் வேறு சில கிராமங்களும் இந்த நடைமுறையை பின்பற்ற முயற்சித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில், சிறந்த சுற்றுலாவுக்கான கிராமங்களின் வரிசையில் 3 கிராமங்களில் ஒன்றாக இந்த கோங்தாங் கிராமம் தேர்வு செய்யப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.