அசுத்த நீரை குடித்த வாலிபர் சாவு ; பொதுமக்கள் போராட்டம் - பரபரப்பு
தாவணகெரே அருகே அசுத்த நீரை குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கமகளூரு;
அசுத்தமான குடிநீர்
தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா கணக்கட்டே கிராமத்தில் தூய்மையான குடிநீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அசுத்தமாக கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உடல் வலி மற்றும் காய்ச்சல் உள்பட பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து கிராம பஞ்சாயத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சுகாதாரத்துறை அதிகாரி நாகராஜ் தலைமையிலான அதிகாரிகள் வந்து முகாம் அமைத்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் உடல்நிலை மோசமாக இருந்த 20-க்கும் மேற்பட்டோர் ஜகலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிலர் மேல் சிகிச்சைக்காக தாவணகெரே மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாலிபர் சாவு
இதில் கணக்கட்டே கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 25) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதை கேட்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அசுத்த குடிநீர் குடித்ததால் ஏற்பட்ட பாதிப்புதான் இறப்பிற்கு காரணம் என கூறி ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஜகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ரமேசின் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.