வாலிபரை எரித்து கொன்று உடல் மலையில் வீச்சு- தலைமறைவானவருக்கு வலைவீச்சு
பண்ட்வால் அருகே, முன்விரோதத்தில் வாலிபரை கொன்று உடலை மலையில் வீசி தலைமறைவானவரை போலீசார் தேடிவருகின்றனர்.
மங்களூரு: பண்ட்வால் அருகே, முன்விரோதத்தில் வாலிபரை கொன்று உடலை மலையில் வீசி தலைமறைவானவரை போலீசார் தேடிவருகின்றனர்.
முன்விரோதம்
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா போலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் சமத்(வயது 25). இதேபோல் அதேகிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் சமத்தை, அப்துல் ரஹ்மான் ஈரா அருகே உள்ள மூலூர்படவு பகுதியில் இருக்கும் மலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
எரித்து கொலை
அங்கு வைத்து அப்துல் சமத்தை, அப்துல் ரஹ்மான் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்து உடலை மலைப்பகுதியில் வீசியுள்ளார்.
பின்னர் ஊருக்கு திரும்பிய அப்துல் ரஹ்மான், தனது நண்பர் ஒருவரிடம் கொலை சம்பவத்தை கூறியுள்ளார். மேலும் கொலை சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் மூடிமறைக்க உதவிகேட்டுள்ளார்.
இதற்கிடைய அப்துல் சமத் மாயமாகவிட்டதாக விட்டல் போலீஸ் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் சமத்தை தேடிவந்தனர். இந்த நிலையில் பயத்தில் அப்துல் ரஹ்மானின் நண்பர் நடந்த விஷயத்தை கிராம மக்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி விட்டலா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
வலைவீச்சு
போலீசார் விசாரணையில் முன்விரோதத்தில் அப்துல் சமத்தை, அப்துல் ரஹ்மான் மலைப்பகுதிக்கு அழைத்து சென்று மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொன்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அப்துல் ரஹ்மானை வலைவீசி தேடிவருகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட மலைக்கு சென்று கொலையான அப்துல் சமத்தின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.