போலீசிடம் இருந்து தப்பி பாலத்தின் மேலிருந்து கீழே குதித்த வாலிபர் சாவு
நில விவகாரம் தொடர்பாக விசாரணைக்காக அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பி பாலத்தின் மேலிருந்து கீழே குதித்த வாலிபர் உயிரிழந்தார். அவரை போலீசார் கொலை செய்துவிட்டதாக அவரது மனைவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு:-
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்
தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா கப்பளா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ்(வயது 34). இவர் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஆவார். இவர் வேறொருவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து தனது பெயரில் பதிவு செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் சன்னகிரி டவுனில் உள்ள காந்திநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஹரீஷ் தனது மனைவி ஊரான சன்னகிரி அருகே உள்ள காகனூர் கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் காகனூரு கிராமத்திற்கு சென்று நேற்று மதியம் 2.30 மணியளவில் ஹரீசை கைது செய்தனர்.
ஜீப்பில் இருந்து குதித்தார்
பின்னர் அவர்கள் ஜீப்பில் சன்னகிரி போலீஸ் நிலையத்துக்கு ஹரீசை அழைத்துச் சென்றனர். அவர்கள் தாவணகெரே தாலுகா தோலஹுனசே கிராமம் வழியாக ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஹரீஷ் போலீசாரிடம் கைகலப்பில் ஈடுபட்டார். பின்னர் ஓடும் ஜீப்பில் இருந்து வெளியே குதித்த அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.
அவர் அங்குள்ள ஒரு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த ஹரீஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சன்னகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஹரீஷ் பரிதாபமாக இறந்தார்.
ஆஸ்பத்திரி முற்றுகை
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஹரீஷ் இறந்தது பற்றி தகவல் அறிந்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் தாவணகெரே மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஹரீசின் மனைவி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருணிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
அதில் தனது கணவர் ஹரீசை விசாரணைக்காக காந்திநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணப்பா மற்றும் 2 போலீஸ்காரர்கள் அழைத்துச் சென்று, போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கி கொலை செய்துவிட்டதாகவும், பின்னர் அவரது உடலை பாலத்தின் மேலிருந்து வீசிவிட்டு நாடகமாடுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் இதுபற்றி அவர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.