வீட்டில் பயங்கர தீ; பெண் உடல் கருகி சாவு
பெங்களூருவில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெண் உடல் கருகி உயிரிழந்தார்.
பெங்களூரு:-
பெண் கருகி சாவு
பெங்களூரு மல்லேசுவரம் மந்திரி மால் பின்புறம் வசிப்பவர் மேரி (வயது 55). இந்த நிலையில் அவர், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் அந்த தீ, மளமளவென வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மேரி வீட்டில் இருந்து வெளியே ஓடிவர முயன்றார். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவரால் வெளியே வரமுடியவில்லை.
மேலும் அந்தப்பகுதி மக்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அவரை காப்பாற்ற முயன்றனர். அவர்களின் முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. ஆனாலும் அதற்குள் மேரி, தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
இதற்கிடையே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மல்லேசுவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தீயில் கருகி பலியான மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனாலும், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் பெஸ்காம் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.