சித்தராமையா- டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி முதல்-மந்திரி தேர்வு இழுபறி டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் விடிய,விடிய ஆலோசனை
சித்தராமையா-டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்துள்ளதால் முதல்-மந்திரி தேர்வில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் விடிய, விடிய ஆலோசனை நடத்தினர்.
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந் தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிதாக வெற்றி பெற்ற 135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்டனர். அந்த கருத்துகளை அவர்கள் எழுத்து மூலமாக பதிவு செய்து கொண்டனர். மேலும் பகிரங்கமாக கருத்து சொல்ல விரும்பாத எம்.எல்.ஏ.க்களுக்கு தனியாக ஒரு பெட்டி வைக்கப்பட்டது. அதில் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் கருத்துகளை ஒரு சீட்டில் எழுதி போட்டனர். இந்த கருத்து கேட்கும் பணி இரவு 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது.
இந்த கருத்துகளை ஒருங்கிணைத்து அறிக்கையாக தயாரித்த மேலிட பார்வையாளர்கள் அதை நேற்று டெல்லிக்கு கொண்டு சென்றனர். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கை அடிப்படையில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது. பெரும்பாலான எம்.எல். ஏ.க்கள் சித்தராமையாவை ஆதரித்து கருத்து கூறி இருப்பதாகவும், அதனால் சித்தராமையா புதிய முதல்-மந்திரியாக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஒக்கலிகர் சங்கம், டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அந்த சமூக மடாதிபதிகள் நிர்மலானந்தநாத சுவாமி, நஞ்சாவதூத சுவாமி மற்றும் லிங்காயத் மடாதிபதிகள் என 20 மடாதிபதிகள் பகிரங்கமாகவே டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கூடி அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆதரவாளர்கள் தேங்காய் உடைத்து வேண்டி கொண்டனர்.
அதே போல் குருபா சமூகம், சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் அவரது ஆதரவாளர்கள், அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். அவரது ஆதரவாளர்களும் கோவில்களில் தேங்காய் உடைத்து வேண்டி கொண்டுள்ளனர். கர்நாடக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், முதல்-மந்திரி பதவி சித்தராமையாவுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு ஒரு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், "முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது குறித்து நாங்கள் கருத்து தெரிவித்தோம். ரகசிய கருத்து கேட்பு நடத்தப்பட்டதால் நாங்கள் எங்களின் கருத்துகளை சீட்டில் எழுதி பெட்டியில் போட்டோம். ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்கள் கையை உயர்த்தி ஆதரவு தெரிவிக்க விரும்பினர். ஆனால் இது பகிரங்கமாக கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்று மேலிட பார்வையாளர்கள் கூறினர். அதனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது" என்றார்.
கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் யாரை முதல்-மந்திரி ஆக்குவது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு கட்சி மேலிடத்திடம் வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. சிலர் வெளிப்படையாகவும் கருத்துகளை கூறினர். மற்ற சிலர் ரகசிய கருத்து கேட்பு மூலம் கருத்துகளை தெரிவித்துள்ளனர். புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின் பேரில் சித்தராமையா நேற்று மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா, ஜமீர் அகமதுகான் உள்பட புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.
அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் டெல்லி செல்வதாக கூறினார். அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார். சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி உள்ளதால், டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அதனால் அவர் டெல்லி செல்வதை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அவரது தம்பியும், எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் டெல்லி சென்றுள்ளார்.
முதல்-மந்திரி பதவி கேட்டு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 பேரும் பிடிவாதமாக இருப்பதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. இதனால் முதல்-மந்திரி தேர்வில் இழுபறி நீடிக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மேலிட பார்வையாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை விடிய, விடிய நடந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் காங்கிரஸ் மேலிடம் புதிய முதல்-மந்திரியை அறிவித்து, பதவி ஏற்பு விழாவை வருகிற 18-ந் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.