மெட்ரோ ரெயில் தூண் விழுந்து தாய்-குழந்தை பலி; ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை


மெட்ரோ ரெயில் தூண் விழுந்து தாய்-குழந்தை பலி; ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை
x

பெங்களூருவில் நடைபெற்ற மெட்ரோ ரெயில் தூண் விபத்து குறித்து கர்நாடக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளது.

பெங்களூரு:

கான்கிரீட் கலவை

பெங்களூரு சில்க்போர்டு முதல் சர்வதேச விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஹெப்பால்-கே.ஆர்.புரம் இடையே எச்.பி.ஆர். லே-அவுட் பகுதியில் மெட்ரோ திட்ட தூண் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்கு இரும்பு கம்பிகள் தூண் பொருத்தப்பட்டு, அதில் கான்கிரீட் கலவை செலுத்த இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அந்த இரும்பு கம்பி தூண் திடீரென சரிந்து, அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இதில் அந்த வழியாக பயணம் செய்த தேஜஸ்வினி, அவரது 2½ வயது மகன் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். அவரது கணவரும், மகளும் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விசாரணை நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பு

இந்த நிலையில் கா்நாடக ஐகோர்ட்டு, இந்த விபத்து குறித்து தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து கொண்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய தலைமை நீதிபதி பி.பி.வராலே, நீதிபதி அசோக் ஆகியோர், ""பெங்களூருவில் மெட்ரோ தூண் சரிந்து விழுந்து அப்பாவிகள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் சாலை பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்ரோ திட்ட பணிகள் நடைபெறும் பகுதிகளில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த இடத்தை முன்கூட்டியே அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்களா?. அதுகுறித்து அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா?. ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மேலும் இதுதொடர்பாக ரிட் மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கும், பெங்களூரு மெட்ரோ ரெயில்வே நிறுவனத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து இதன் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


Next Story