கழிவறை தொட்டியில் தவறி விழுந்து காட்டு யானை செத்தது


கழிவறை தொட்டியில் தவறி விழுந்து காட்டு யானை செத்தது
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சோமவார்பேட்டையில் கழிவறை தொட்டியில் தவறி விழுந்து காட்டு யானை செத்தது.

குடகு:

காட்டு யானை அட்டகாசம்

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா இளநீர்குந்தி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி கிராமத்தையொட்டி உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. காட்டு யானைகளின் அட்டகாசத்தால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும், வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கழிவறை தொட்டியில்...

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டு யானை ஒன்று வெளியேறி உள்ளது. மேலும் அந்த யானை, இளநீர்குந்தி கிராமத்துக்குள் நுழைந்துள்ளது. கிராமத்தையொட்டி உள்ள சந்திரசேகர் என்பவரின் வாழை தோட்டத்தில் புகுந்த அந்த யானை வாழைப்பழங்களை ருசிக்க முயன்றுள்ளது. அப்போது அங்கு இருந்த பழமையான தரைமட்ட கழிவறை தொட்டியில் அந்த யானை தவறி விழுந்தது. இதில் யானையின் தலை பயங்கரமாக சுவரில் மோதியது.

மேலும் இந்த தொட்டியில் இருந்து யானையால், வெளியே வர முடியவில்லை. இதனால் தொட்டியில் சிக்கி கொண்ட அந்த யானை, வெளியே வர முடியாமல் பரிதாபமாக செத்தது.

வனத்துறையினர் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர், கழிவறை தொட்டியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானையின் உடலை கிரேன் உதவியுடன் வெளியே கொண்டு வந்தனர். பின்னர் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு அதேப்பகுதியில் வைத்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் காட்டு யானையின் உடலை அதேப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி பூவய்யா கூறுகையில், இது பெண் யானை ஆகும். உணவு தேடி வந்தபோது, கழிவறை தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இதுபற்றி விசாரித்து வருகிறோம் என்றார்.


Next Story