எக்ஸ்பிரஸ் ரெயில் வரும்போது தண்டவாளத்தில் சிக்கிய பெண்; தக்க தருணத்தில் காப்பாற்றிய அதிகாரி
உத்தர பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் தண்டவாளத்தில் நடந்து, மேலே ஏற முடியாமல் தவித்த பெண்ணை தக்க தருணத்தில் அதிகாரி மீட்டு காப்பாற்றினார்.
பிரோசாபாத்,
உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகர ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் தண்டவாளத்தின் மீது பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அந்த வழியே எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று எதிர்திசையில் இருந்து வந்து கொண்டிருந்தது.
இதனை கவனித்த அந்த பெண் நின்று, கவனித்து தண்டவாளத்தில் இருந்து நடைமேடைக்கு ஏற முயன்றுள்ளார். ஆனால், அவரால் உடனடியாக மேலே வரமுடியவில்லை. ரெயில் கடந்து செல்ல ஒரு சில வினாடிகளே இருந்த நிலையில், நிலைமையை உணர்ந்து உதவி கேட்டு கத்தியுள்ளார்.
இதனை கவனித்த ரெயில்வே அதிகாரி ஒருவர் உடனடியாக ஓடி சென்று கைகொடுத்து, அந்த பெண்மணியை காப்பாற்றினார். இந்த காட்சிகள் ரெயில் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தன.
பொதுவாக ரெயில்கள் செல்வதற்கான தண்டவாளத்தின் மீது நடந்து செல்வதற்கோ அல்லது கடந்து செல்வதற்கோ அனுமதி அளிக்கப்படுவது இல்லை. இதனை மீறுவோருக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்படும். எனினும், ஒரு சிலர் அவசரகதியில் அல்லது சோம்பேறித்தனம் அடைந்து அலட்சியமுடன் தண்டவாளத்தில் நடந்து சென்று ஆபத்து தேடி கொள்கின்றனர்.
அதிலும், இதுபோன்ற விரைவு ரெயில்கள், நிறுத்தம் இல்லாத இடங்களில் அதிவிரைவுடன் செல்லும்போது, அதனை கவனிக்கவில்லை என்றால் பெரும் இடர் ஏற்படும் சூழல் உருவாகும்.
இந்த சம்பவத்தில் அந்த பெண்ணை அதிகாரி மீட்ட ஒரு சில வினாடிகளில் ரெயில் விரைவாக கடந்து சென்றது. எனினும், அவரது பை ஒன்று நடைமேடையின் விளிம்பில் வைக்கப்பட்டு உள்ளது. அதனை எடுப்பதற்காக மீண்டும் ரெயில் கடந்து செல்லும்போது, ஓடி சென்று அதனை எடுக்க பெண் முற்பட்டார்.
இதுபோன்ற தருணங்களில் ரெயிலின் அருகே செல்வது பேராபத்து என்றபோதும், அந்த பெண் தனது உடைமைகளுக்காக மீண்டும் ரெயிலை நெருங்கி சென்றது தவறான செயலாகவே பார்க்கப்படுகிறது. இதுபற்றி ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் சிவலால் மீனா கூறும்போது, ஒரு பெண் ரெயில்வே தண்டவாளத்தில் கடந்து செல்லும்போது நாங்கள் அவரை கவனித்தோம்.
ரெயில் வந்து கொண்டிருந்தது. அதனால், நான் காப்பாற்றுவதற்காக ஓடி சென்றேன். மற்றொரு திசையில் இருந்து ரெயில்வே அதிகாரி ஒருவரும் ஓடினார். மேலே ஏற முடியாமல் தவித்த பெண்ணை தக்க தருணத்தில் அதிகாரி மீட்டு காப்பாற்றியுள்ளார் என கூறியுள்ளார்.