புதிய வீடு வாங்கி குடியேறிய 5 நாளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
புதிய வீடு வாங்கி குடியேறிய 5 நாளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மங்களூரு:-
புது வாங்கிய இளம்பெண்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த உல்லால் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கும்பலாவை அடுத்த சித்ராஞ்சலிநகரில் உள்ள பரங்கிபேட்டை பகுதியை சேர்ந்தவர் அஷ்வினி பங்கேரா (வயது 25). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரங்கிபேட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றை வாங்கினார்.
இந்த வீட்டை வாங்குவதற்கு அதிகளவு வங்கி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் 3-ந் தேதி வீடு கிரகபிரவேசம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்து மங்களூரு வந்த அஷ்வினி பங்கேரா, தனது தாய் மற்றும் பெரியம்மா, அவரது மகன்கள் ஆகியோருடன் ஜூன் 3-ந் தேதி வீடு கிரகபிரவேசம் செய்து குடியேறினார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த அறையில் தனியாக இருந்த அஸ்வினி மின் சிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரமாக அவரது அறைக்கதவு திறக்கப்படாமல் கிடந்ததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அஸ்வின் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் உல்லால் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக தற்கொலை நடந்த இடத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அஸ்வினி தனது கைப்பட எழுதி வைத்த 24 பக்க தற்கொலை கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில் எனது தற்கொலைக்கு வீட்டின் உரிமையாளர் மற்றும் வங்கி அதிகாரிகள்தான் காரணம். போலியான ஆவணங்களை கொடுத்து வீட்டை விற்றதால் என்னால், வங்கி கடனை சரியாக செலுத்த முடியாமல் போனதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் எனது செல்போனை, காதலனிடம் வழங்கும்படி கேட்டு கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
போலீசார் தீவிர விசாரணை
இதையடுத்து அந்த தற்கொலை கடிதம் மற்றும் செல்போனை கைப்பற்றிய போலீசார் குடும்பத்தினர், வீட்டின் உரிமையாளர் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உல்லால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீடு வாங்கிய 5 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.