வாலிபருடன் புர்கா அணிந்து சென்ற இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி தகராறு


வாலிபருடன் புர்கா அணிந்து சென்ற இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி தகராறு
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வேறு மதத்தை சேர்ந்த வாலிபருடன் புர்கா அணிந்து சென்ற இளம்பெண்ணை தகாத வார்த்தையில் திட்டி வீடியோ எடுத்து வெளியிட்ட கோலார் மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு:-

புர்கா அணிந்த இளம்பெண்

பெங்களூரு நகரில் 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர், கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற நேர்முக தேர்வில் பங்கேற்க தனது நண்பருடன் புர்கா அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், இளம்பெண்ணை வழிமறித்துள்ளார்.

பின்னர் புர்கா அணிந்து கொண்டு வேறு மதத்தை சேர்ந்த வாலிபருடன் எங்கே செல்கிறாய்? என்று கேட்டு இளம்பெண்ணை அந்த நபர் திட்டியதாக கூறப்படுகிறது. அத்துடன் அந்த வாலிபருடன், புர்கா அணிந்து கொண்டு சென்றதை தனது செல்போனில் அந்த நபர் வீடியோ எடுத்ததுடன், தகாத வார்த்தையில் திட்டியதுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

சமூக வலைதளங்களில் வீடியோ

இந்த நிலையில், இளம்பெண் புர்கா அணிந்து கொண்டு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்து இளம்பெண்ணும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கடந்த 26-ந் தேதி கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அந்த நபரையும் போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், இளம்பெண் புகார் அளித்த 24 மணிநேரத்தில் சைபர் கிரைம் போலீசாரால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மருத்துவ மாணவர்

கடந்த 24-ந் தேதி புர்கா அணிந்து கொண்டு நண்பருடன் சென்ற இளம்பெண்ணை வழிமறித்து தகாத வார்த்தையில் திட்டி தகராறு செய்ததுடன், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த ஜாகீர் (வயது 25) கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், பெங்களூரு கோவிந்தபுராவில் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். ரஷியாவில் மருத்துவம் படித்து வந்த ஜாகீர், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, 2 மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார்.

வேறு மதத்தை சேர்ந்த வாலிபருடன், புர்கா அணிந்து சென்றதால் இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையில் திட்டி தகராறு செய்ததுடன், வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்து திட்டுவது, வீடியோ எடுப்பது, சமூக வலைதளங்களில் வெளியிடுவது தவறான ெசயல். ஜாகீரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story