புதிதாக வாங்கிய பைக்கை நண்பர்களிடம் காட்ட சென்ற வாலிபர் - விபத்தில் பலி


புதிதாக வாங்கிய பைக்கை நண்பர்களிடம் காட்ட சென்ற வாலிபர்  - விபத்தில் பலி
x

புதியதாக வாங்கிய மோட்டார்சைக்கிளை நண்பர்களிடம் காட்ட சென்ற வாலிபர் கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம்,ஒற்றப்பாலம் பாலப்பரம் பகுதியை சேர்ந்தவர் சவுக்கத் அலி.இவரது மகன் ஷாஜகான் (வயது 19). இவர் கடந்த வியாழக்கிழமை புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார் . இவர் வாங்கிய புதிய மோட்டார் சைக்கிளை தனது நண்பர்களிடம் காட்டுவதற்காக நேற்று ஒற்றப்பாலம் சென்றார்.

அங்கு நண்பர்களுக்கு மோட்டார் சைக்கிளை காட்டிவிட்டு இரவு 10 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.இந்நிலையில்,கொளப்பள்ளி அருகே வந்தபோது பாலக்காட்டிலிருந்து ஒற்றப்பாலம் நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது

இதில் ஷாஜகான் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலமாக சேதமடைந்தது. அருகில் இருந்தவர்கள் ஷாஜகானை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ஒற்றப்பாலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பின் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்க தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஒற்றப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story