முகநூல் மூலம் அறிமுகமாகி திருமணம்- ரூ.18 லட்சம் நகை, பணத்தை சுருட்டிய இளம்பெண்
முகநூல் மூலம் அறிமுகம் ஆகி, திருமணம் செய்து கொண்ட நிலையில் ரூ.18 லட்சம் நகை, பணம் மற்றும் பொருட்களை சுருட்டிக்கொண்டு இளம்பெண் தப்பி ஓடியதாக தனியார் நிறுவன ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு:-
வேலை வாங்கி...
பெங்களூரு சந்திரா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 33). இவருக்கு பேஸ்புக் (முகநூல்) மூலம் இளம்பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். இருவரும் செல்போன் எண்களை மாற்றி கொண்டு பேசி வந்தனர். அப்போது தனக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்யுமாறு இளம்பெண் கூறி உள்ளார். உடனே சந்தோஷ் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தார். பின்னர் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தனர்.
இதற்கிடையே இருவரும் காதலிக்க தொடங்கினர். இதுகுறித்து இளம்பெண் தனது சகோதரியிடம் கூறினார். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி சந்தோசுக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது சந்தோசிடம் இருந்து விலை உயர்ந்த 2 ஐபோன்களை இளம்பெண் கேட்டு பெற்றுக்கொண்டார். மேலும் நகைகளுக்காக ரூ.1½ லட்சத்தையும் வாங்கினர். இதையடுத்து அவர்களுக்கு சந்திரா லே-அவுட் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது.
நகை, பணத்துடன் ஓட்டம்
திருமணத்திற்கு பிறகு 3 மாதங்கள் வரை இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி உள்ளதாக இளம்பெண் கூறி உள்ளார். மேலும் அதைக்கூறி வீட்டில் இருந்த தங்க நகைகள், செல்போன்கள் என ஒட்டுமொத்தமாக ரூ.18 லட்சம் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் சந்தோஷ், அவரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அப்போது தான் திருமணம் செய்து அந்த பெண் நகை, பணம், விலை உயர்ந்த பொருட்களை சுருட்டிக் கொண்டு தப்பி ஓடியது சந்தோசுக்கு தெரியவந்தது.
பணத்திற்காக...
இதுகுறித்து அறிந்த சந்தோஷ் உடனடியாக சந்திரா லே-அவுட் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இளம்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று இருந்ததும், பணத்திற்காக சந்தோசை திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. இதையடுத்து இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.