கற்பழிப்பால் உருவான குஜராத் இளம்பெண்ணின் கருவை கலைக்க அனுமதி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கற்பழிப்பால் உருவான குஜராத் இளம்பெண்ணின் கருவை கலைக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
குஜராத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கற்பழிப்புக்கு உள்ளாகி கர்ப்பமானார். அவரது 26 வார கருவை கலைக்க அனுமதி கேட்டு மாநில ஐகோர்ட்டில் கடந்த 7-ந் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்ததுடன், விசாரணையையும் தள்ளி வைத்தது.
இந்தியாவில் திருமணமான பெண்கள் மற்றும் கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுமிகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவினருக்கு அதிகபட்சமாக 24 வாரங்கள் வரை மட்டுமே கருக்கலைப்புக்கு அரசு அனுமதிக்கிறது.
எனவே இந்த விவகாரத்தில் தாமதத்தை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜால் பூயன் ஆகியோரை கொண்ட சிறப்பு அமர்வு கடந்த 19-ந்தேதி விசாரித்தது. அப்போது இளம்பெண்ணின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்க மருத்துவக்குழுவுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள், இளம்பெண்ணின் கருவை கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
முன்னதாக இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்திய குஜராத் ஐகோர்ட்டின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.