மதம் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது- தமிழக சபாநாயகர் அப்பாவு பேட்டி


மதம் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துகள்   அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது-  தமிழக சபாநாயகர் அப்பாவு பேட்டி
x

கவர்னர் ஆர்.என்.ரவி மதம் குறித்து கூறும் கருத்துகள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறினார்.

பெங்களூரு: கவர்னர் ஆர்.என்.ரவி மதம் குறித்து கூறும் கருத்துகள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சபாநாயகர்கள் கூட்டம்

நாட்டில் சிறப்பாக செயல்படும் சட்டமன்றங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படுகிறது. அதற்காக கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் டெல்லி, பீகார், அசாம், குஜராத், மராட்டியம், தமிழ்நாடு மாநில சட்டசபைகளின் சபாநாயகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் சபாநாயகர் காகேரி தலைமையிலான அந்த குழுவின் 2-வது கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, டெல்லி சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல், அசாம் மாநில சபாநாயகர் பிஸ்வஜித் டைமரி, பீகார், குஜராத், மராட்டிய மாநிலங்களின் சட்டசபை சபாநாயகர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு இடையே தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய இறையாண்மை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறி வரும் கருத்துகள் குறித்து என்னிடம் பலர் தங்களின் கருத்துகளை என்னிடம் கூறிக்கொண்டு தான் வருகிறார்கள். சபாநாயகர் என்ற முறையில் நான் இந்த விஷயத்தில் கருத்துகளை கூற முடியாது. ஆனால் ஆர்.என்.ரவி கவர்னராக கடந்த செப்டம்பர் மாதம் பதவி ஏற்றார். அப்போது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 159-ன்படி கவர்னராக எனது கடமையை சிறப்பாக செய்வேன் என்றும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி இந்திய இறையாண்மைக்கு எந்த பாதகமும் இல்லாமல், சாதி-மதத்திற்கு அப்பாற்பட்டு, இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதோடு, அதற்கு எந்த பாதகமும் வராதபடி செயல்படுவேன் என்றும் உறுதிமொழி எடுத்து கொண்டார்.

ஆனால் அதன் பிறகு அவர், இது மதம் சார்ந்த நாடு என்று பேசுகிறார். மதம் குறித்து கவர்னர் கூறும் கருத்துக்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பல சட்ட மேதைகள், அரசியல்வாதிகள் என்னிடம் கவர்னர் இவ்வாறு பேசுகிறாரே என்று கேட்டனர். கவர்னராக பதவி ஏற்ற பிறகு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான வார்த்தைகளை அவர் பயன்படுத்துவது அந்த அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமான செயல்.

கண்டிக்க அழைத்தார்களா?

இதுகுறித்து தமிழகத்தின் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர். கவர்னர் ஆர்.என்.ரவி சமீபத்தில் டெல்லி சென்றார். அங்கு யாரை சந்தித்தார் என்ற விவரம் என்னிடம் இல்லை. அவரை கண்டிக்க அழைத்தார்களா? என்று தெரியவில்லை. ஆனால் அவர் பேசிய கருத்துகள் தவறு என்று பல்வேறு தரப்பினரும் கூறுகிறார்கள்.

இவ்வாறு அப்பாவு கூறினார்.

அவரிடம் நிருபர்கள் எம்.எல்.ஏ.க்களின் கட்சி தாவல் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், இதை அரசியல்வாதியிடம் கேளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story