துபாயில் கோர விபத்து; கர்நாடகத்தை சேர்ந்த 6 பேர் பலி
துபாயில் நடந்த கோர விபத்தில் கர்நாடகத்தை சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.
பெங்களூரு:
துபாயில் நடந்த கோர விபத்தில் கர்நாடகத்தை சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.
ஒரே குடும்பத்தினர்
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் (மாவட்டம்) டவுனில் ஆஷாபுரா சாலையில் துவாரகா நகரை சேர்ந்தவர் ஷாபி சுல்லேட் (வயது 54). இவர் ராய்ச்சூர் வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தரின் உதவியாளராக பணியாற்றி வந்தார். ஷாபிக்கு திருமணமாகி சிராஜ்பேகம் (45) என்ற மனைவியும், ஷிபா (20) என்ற மகளும், சமீர் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் ஷாபி தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் தாய் பேபி ஜான் (64) ஆகியோருடன் கடந்த 14-ந்தேதி மெக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
தம்பதி உள்பட 4 பேர் பலி
அவர்கள் துபாயில் இருந்து பஸ்சில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கன்டெய்னர் லாரியும், அவர்கள் சென்ற பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் பஸ் பலத்த சேதமடைந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி ஷாபி, அவரது தாய் பேபி ஜான், மனைவி சிராஜ் பேகம், மகள் ஷிபா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். ஷாபியின் மகன் சமீர் பலத்த காயத்துடன் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்
இந்த விபத்தில் மொத்தம் 8 பேர் பலியானதாகவும், இதில் ராய்ச்சூரை சேர்ந்த 4 பேரும், கலபுரகி மற்றும் யாதகிரியை சேர்ந்த தலா ஒருவர் உள்பட கர்நாடகத்தை சேர்ந்த 6 பர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மற்ற இருவர் பற்றி தகவல் தெரியவில்லை. துபாயில் நடந்த விபத்தில் கர்நாடகத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் இறுதிச்சடங்குகளும் துபாயில் நடத்த உறவினர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.