மோட்டார் சைக்கிள் மீது பொக்லைன் எந்திரம் மோதல்; வாலிபர் பலி
உப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது பொக்லைன் எந்திரம் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். அவரது நண்பர்கள் ௨ பேர் படுகாயம் அடைந்தனர்.
உப்பள்ளி:
தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா அஞ்சட்டகேரி பகுதியில் வசித்து வந்தவர் சன்னபசப்பா(வயது 26). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் தார்வார் டவுன் நோக்கி புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை சன்னபசப்பா ஓட்டினார். அவரது நண்பர்கள் 2 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர். அவர்கள் உப்பள்ளி தாலுகா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு பொக்லைன் எந்திரம் எதிர்பாராத விதமாக சன்னபசப்பா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சன்னபசப்பா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்கள் உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து தார்வார் டவுன் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.