ஒரு மாதத்தில் இயல்பு நிலை திரும்பும் தக்காளி விலை 15 நாட்களில் குறைந்து விடும் மத்திய அரசு தகவல்


ஒரு மாதத்தில் இயல்பு நிலை திரும்பும் தக்காளி விலை 15 நாட்களில் குறைந்து விடும் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 1 July 2023 5:15 AM IST (Updated: 1 July 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

தக்காளி விலை அடுத்த 15 நாட்களில் குறைந்து விடும் எனவும், ஒரு மாதத்தில் இயல்பு நிலை திரும்பும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய காய்கறியில் ஒன்றான தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் ஒரு கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை ஆகிறது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். தக்காளி விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தக்காளி விலை விரைவில் சரிந்து இயல்பு நிலை திரும்பும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தக்காளி உற்பத்தி மையங்களில் இருந்து வினியோகம் அதிகரித்து இருக்கிறது. இதனால் அடுத்த 15 நாட்களில் தக்காளி விலை குறைந்து விடும். ஒரு மாதத்தில் இயல்பு நிலை திரும்பி விடும்.

எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு விவசாய பொருளும், விலைச் சுழற்சியில் ஒரு பருவநிலையைக் கடந்து செல்கின்றன. இந்தியாவில் தக்காளி விலை ஆண்டுதோறும் இந்த நேரத்தில் உயரும் நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தக்காளி விலை உச்சத்தை எட்டியது.

தக்காளியை பொறுத்தவரை பருவநிலைைய பொறுத்து விரைந்து அழிந்துபோகக்கூடிய பொருளாக உள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் பிற சிக்கல்களால் சமீப காலமாக வினியோகமும் பாதித்துள்ளது.

தக்காளியை நீண்ட காலத்துக்கு உங்களால் சேமித்து வைக்க முடியாது. அத்துடன் நீண்ட தூரத்துக்கு கொண்டு செல்லவும் முடியாது. ஜூன்-ஆகஸ்டு, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் குறைவான உற்பத்தி காரணமாக தக்காளி விலை வழக்கமாக அதிகரித்தே இருக்கும்.

அதற்காக விலை உயர்வை நியாயப்படுத்தவில்லை. இது ஒரு சிக்கலான பிரச்சினை.

எனினும் இந்த விவகாரத்தை அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. மேலும் ஆண்டு முழுவதும் வினியோகத்தை சீராக்குவதற்கான தீர்வைக் கண்டறிய முயற்சித்து வருகிறது.

இதற்காக பிரமாண்ட தக்காளி சவால் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்படி தக்காளியின் முதன்மை செயலாக்கம், சேமிப்பு மற்றும் மதிப்பீட்டு பணிகளில் மாணவர்களிடமிருந்து யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

இவ்வாறு ரோகித் குமார் சிங் கூறினார்.


Next Story