ஊழல் செய்த பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை
ஜனதா தளம் (எஸ் கட்சி) ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்த பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிகில் குமாரசாமி கூறியுள்ளார்.
கோலார் தங்கவயல்:-
ஆன்லைன் சூதாட்டம் தடை
கோலாரில் நேற்று ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
கர்நாடகாவில் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது ஆன் லைன் சூதாட்டம், சாராய விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடைவிதித்தார். அதை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சித்தராமையா ஆன் லைன் சூதாட்டத்திற்கு அனுமதி அளித்தார். தற்போது ஆட்சி செய்து வரும் பா.ஜனதா அரசு இதை கண்டு கொள்ளவில்லை. இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனையோ குடும்பங்கள் நடுதெருவிற்கு வந்துள்ளது. இதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
வருகிற சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால் ஆன்லைன் சூதாட்டம் முழுமையாக தடை செய்யப்படும். ஜனதா தளம் (எஸ்) கட்சி விவசாயிகளின் நலன் குறித்து சிந்திக்க கூடியது. விவசாயியின் மகன்களை திருமணம் செய்ய பெண்கள் முன் வருவதில்லை என்று கூறப்படுகிறது.
ரூ.2 லட்சம் உதவி தொகை
இதனால் பல இளைஞர்கள் மன வேதனையுடன் உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசு தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விவசாயம் செய்யும் இளைஞர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். ஜனதா தளம் (எஸ்) கட்சி வந்ததும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் மாடால் விருபாக்ஷப்பா மகன் கைது செய்யப்பட்டார். ஆனால் இது குறித்து மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ.வின் மீது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல. இதை பார்க்கும்போது மாநில அரசு ஊழலை ஊக்குவிப்பதாக தெரிகிறது. ஏற்கனவே ஆளும் கட்சி மீது 40 சதவீத கமிஷன் புகார் எழுந்தது. மத்திய, மாநில அரசுகள் அதை கண்டு கொள்ளவில்ைல. ஜனதா தளம் (எஸ்) கட்சி இதை கவனித்து வருகிறது. ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்த பா.ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.