டி.டி.ஆர். திட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை


டி.டி.ஆர். திட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் டி.டி.ஆர். திட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறினார்.

பெங்களூரு:

பெங்களூருவில் டி.டி.ஆர். திட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறினார்.

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முறைகேடு செய்தவர்கள்

பெங்களூருவில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்காக கட்டிடங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அத்தகைய கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு டி.டி.ஆர். திட்டத்தின் கீழ் வேறு இடத்தில் இடம் ஒதுக்கப்படுகிறது. டி.டி.ஆர். திட்டம் என்பது, பெங்களூருவில் சாலை விரிவாக்க திட்டங்களுக்கு கையகப்படுத்தப்படும் கட்டிடங்களுக்கு அதற்கு இணையான மதிப்பு கொண்ட இடத்தை வேறு இடத்தில் ஒதுக்குவது ஆகும். இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த முறைகேடுகளில் தொடர்புடைய பிற அலுவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்களில் சிலர் ஓய்வு பெற்றுவிட்டனர். அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. அதனால் டி.டி.ஆர். திட்டத்தில் முறைகேடு செய்தவர்களின் பட்டியலை தயாரித்து வருகிறோம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதற்கு முன்பு இருந்த டி.டி.ஆர். திட்டத்தை தற்போதைய பெங்களூரு மாநகராட்சி சட்டத்தின்படி திருத்தி அதை பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இந்த திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கத்தில் டி.டி.ஆர். திட்ட அதிகாரம் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு வழங்கப்படுகிறது.ஏரி, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிலர் கோர்ட்டுக்கு சென்று தடை ஆணை பெற்றுள்ளதால், அத்தகைய கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை. இதுகுறித்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.


Next Story