மிசோரமில் அதிரடி வேட்டை; ரூ.167.86 கோடி போதை பொருட்கள் பறிமுதல்
மிசோரமில் அசாம் ரைபிள் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் ரூ.167.86 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுடெல்லி,
மிசோரமின் சாம்பை மாவட்டத்தில் மெல்புக் கிராமத்தில் அசாம் ரைபிள் படை மற்றும் ஜொக்காவ்தர் போலீசார் கூட்டாக இணைந்து, ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், வாகனம் ஒன்றில் சந்தேகத்திற்குரிய வகையில் பெண் ஒருவர் அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அவரிடம் 55.80 கிலோ எடை கொண்ட 5.05 லட்சம் போதை பொருட்கள் அடங்கிய மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் சந்தை மதிப்பு ரூ167.86 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது என போலீசார் இன்று தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பெண்ணையும் கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.
கடந்த காலங்களிலும், இதுபோன்ற போதை பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றின் சட்டவிரோத கடத்தலை அசாம் படையினர் அதிரடியாக முறியடித்து உள்ளனர்.
அண்டை நாடான மியான்மரில் ஏற்பட்டு உள்ள உள்நாட்டு குழப்பத்தினால், எல்லை வழியே நாட்டுக்குள் அகதிகளாக வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தொடர்ந்து இதுபோன்ற சட்டவிரோத கடத்தல்களும் அதிகரிக்கின்றன என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.