பாஜக கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தொண்டர்கள் - கர்நாடகாவில் பரபரப்பு
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
பெங்களூரு,
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ந் தேதி முடிகிறது. அங்கு ஆட்சியைத் தக்கவைப்பதற்காக பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் வரிந்து கட்டுகின்றன.
இந்த நிலையில், 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாட்டம் பைதகி தொகுதி பாஜக எம்எல்ஏ விருக்ஷப்பா ருத்றப்பாவுக்கு சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக அலுவலகம் முன்பு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சிக்காக எந்த பணிகளையும் செய்யவில்லை என்றும், அவருக்கு சீட் வழங்கப்படாது என்பதை எடியூரப்பா உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மீறி வழங்கினால் பாஜகவில் இருந்து வெளியேற உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், ஓரிரு நாட்களில் பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. அதுபோல் காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.