முதல்-மந்திரி சித்தராமையாவுடன், நடிகர் சிவராஜ்குமார் திடீர் சந்திப்பு
பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையாவுடன், நடிகர் சிவராஜ்குமார் திடீரென சந்தித்து பேசினார். அவரது மனைவி கீதா சிவராஜ்குமார் காங்கிரசில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பெங்களூரு:
நடிகர் சிவராஜ்குமார்
கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சிவராஜ் குமார். இவர் மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். சிவராஜ்குமாரின் மனைவி கீதா. நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகர் சிவராஜ் குமார் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். மது பங்காரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சித்தராமையா உள்பட பலரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததை அடுத்து நடிகர் சிவராஜ்குமாரின் வீட்டுக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
முதல்-மந்திரியுடன் சந்திப்பு
அப்போது சிவராஜ்குமாரின் மனைவி கீதா தனது அண்ணன் மது பங்காரப்பாவுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதுபோல் மது பங்காரப்பாவுக்கு தற்போது மந்திரி பதவியும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரியின் இல்ல அலுவலகத்திற்கு நடிகர் சிவராஜ் குமார், தனது மனைவி கீதா மற்றும் மந்திரி மது பங்காரப்பாவுடன் நேரில் திடீரென சென்றார். அங்கு அவர்கள் முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து சிறிது நேரம் பேசினர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் முதல்-மந்திரியின் வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் சிவராஜ் குமார், அங்கிருந்து யாரிடமும் பேசாமல் காரில் ஏறி சென்றுவிட்டார். நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி கீதா, காங்கிரசில் சேர்ந்திருப்பதாகவும், அது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையாவை சிவராஜ்குமார் சந்தித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.