சான்ட்ரோ ரவி ஆஸ்பத்திரியில் அனுமதி; தற்கொலைக்கு முயற்சியா?
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சான்ட்ரோ ரவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரு:
சான்ட்ரோ ரவி
மைசூருவை சேர்ந்தவர் சான்ட்ரோ ரவி என்ற மஞ்சுநாத். விபசார கும்பல் தலைவனான இவர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகளிடம் பணம் பெற்று கொண்டு பணி இடமாற்றம் வாங்கி கொடுத்து வந்துள்ளார். மேலும் பெரிய தொழில்அதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு இளம் பெண்களை சப்ளை செய்தும் வந்துள்ளார். இவருடன் அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
சான்ட்ரோ ரவி மீது அவரது 2-வது மனைவி மைசூரு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பிறகு தான் அவரை பற்றிய தகவல்கள் அனைத்தும் வெளியாகின. இந்த நிலையில் குஜராத்தில் தலைமறைவாக இருந்த சான்ட்ரோ ரவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
போலீஸ் விசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் போலீஸ் விசாரணையின்போது சான்ட்ரோ ரவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், அவரை போலீசார் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சான்ட்ரோ ரவி, வழக்கத்தை விட அதிக மாத்திரை உட்கொண்டதால் அவரது உடல் நிலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நோய் காரணமாக தினமும் 12 முதல் 14 மாத்திரைகள் சாப்பிடுவதாகவும், 2 முறை இன்சுலின் எடுத்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் சரிவர உணவு சாப்பிடுவில்லை எனவும் தெரிகிறது.
இந்த நிலையில் சரிவர உணவு சாப்பிடாமல் மாத்திரை சாப்பிட்டு வந்ததால் குறைந்த ரத்த அழுத்தம், சோர்வு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாகவும், இதனால் போலீசார் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்ததும் தெரியவந்துள்ளது.
தற்கொலை முயற்சியா?
சான்ட்ரோ ரவியின் உடல் நிலை குறித்து போலீஸ் அதிகாரிகள் டாக்டர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று சான்ட்ரோ ரவி தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சான்ட்ரோ ரவி, விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.