அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம்சுப்ரீம் கோர்ட்டில் எதிர் தரப்பு வாதம்


அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம்சுப்ரீம் கோர்ட்டில் எதிர் தரப்பு வாதம்
x
தினத்தந்தி 6 Jan 2023 2:15 AM IST (Updated: 6 Jan 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமிக்காக அ.தி.மு.க. விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வைரமுத்து தரப்பு வக்கீல் வாதாடினார்.

புதுடெல்லி,

சென்னையில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற ஐகோர்ட்டு தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர். இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

2-வது நாளாக விசாரணை

இந்த மனுக்கள் நேற்றுமுன்தினம் முதல் மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று 2-வது நாளாக பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரித்தது.

அப்போது வைரமுத்து சார்பில் மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது அவர், 'கட்சியின் பொதுக்குழு என்பது உச்சபட்ச அதிகாரத்தை கொண்டுள்ளது. அதில் செயற்குழு உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்.

பொதுக்குழுவில் மாவட்டச் செயலாளர்களும் இடம் பெற்றுள்ளனர். பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும், தேவைப்படும் பட்சத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்ட முடியும்' என குறிப்பிட்டார்.

அவைத்தலைவர் குறித்து கேள்வி

அப்போது நீதிபதிகள், '2017-ம் ஆண்டுக்கு முன் பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?' என கேட்டார். இதற்கு மாற்றப்பட்டுள்ளதாக வக்கீல் ரஞ்சித் குமார் தெரிவித்தார்.

அப்போது, 'அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் என்றால் என்ன?' என நீதிபதிகள் கேட்டபோது, செயற்குழு கூட்டத்தையும் பொதுக்குழு கூட்டத்தையும் தலைமை தாங்கி நடத்துபவரே அவைத்தலைவர் என அழைக்கப்படுகிறார்' வக்கீல் ரஞ்சித் குமார் பதில் அளித்தார்.

பொதுக்குழு செல்லாது

தொடர்ந்து அவர் தனது வாதத்தில், 'பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே உண்டு. ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சி விதிகளின்படி, பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் அவைத்தலைவருக்கு கிடையாது. எனவே, ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற கூட்டம் செல்லாது' என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கீல் சி.ஏ. சுந்தரம், 'ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து இதுவரை எந்த கோர்ட்டிலும் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடரவில்லை. எனவே அந்த பிரச்சினையை இந்த வழக்கில் எழுப்ப முடியாது. 5-ல் ஒரு பகுதியினர் கடிதம் அளித்தாலே பொதுக்குழுவை கூட்டலாம் என கட்சி விதியில் உள்ளது' என குறிப்பிட்டார்.

சுவாரசியம்

தொடர்ந்து மூத்த வக்கீல் ரஞ்சித் குமார் தனது வாதத்தில். 'ஜெயலலிதா மறைந்த பிறகு, அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவியை மாற்றிவிட்டு, கட்சிக்கு தலைமை வகிக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. தற்போது அதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மாற்றி உள்ளனர். பொதுக்குழு கூட்டுவதற்கு 15 நாட்கள் நோட்டீஸ் அவசியம். அ.தி.மு.க.வுக்கு தேவைப்படும் அவசர நடவடிக்கைகளை எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொருளாளர் நியமிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. தேர்தல் சார்ந்த விண்ணப்பங்களில் இருவருக்கும் கையெழுத்திட அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்தார்.

அப்போது, நீதிபதிகள், 'கட்சியின் 42-வது விதி திருத்தம் ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் அடிப்படை உறுப்பினர்களால், ஒரே வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றிருப்பது சுவாரசியமாக உள்ளது' என குறிப்பிட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்

தொடர்ந்து வக்கீல் ரஞ்சித் குமார் தனது வாதத்தில், 'இடைக்கால அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மகன் உசேன், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட விவகாரம், விழுப்புரம் மாவட்ட செயலாளர் மேடை ஏறி மூன்று முறை தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்த விவகாரம் ஆகியவற்றை குறிப்பிட்டதுடன், கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை தாக்கல் செய்தார்.

தி.மு.க.வுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து செயல்பட்டதால், பொதுக்குழு அவரை நீக்கியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது நிகழ்ச்சி நிரலில் இடம் பெறாதவற்றை, பொதுக்குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றி உள்ளனர். அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர், ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் ஆகிய பதவியில் இருந்தும், கட்சி உறுப்பினர்கள் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்காக மாற்றம்

ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு எதிராக கூட்டப்பட்டது. கட்சியின் அடிப்படை விதிகளை எப்படி மாற்றியமைக்க கூடாதோ அப்படி மாற்றி அமைத்துள்ளனர். கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருப்பார் என்ற விதியையும் நீக்கி உள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளராக போட்டியிடுவதற்கான திருத்த விதிகளை பார்த்தோம் என்றால், அதற்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிடுவதாக உள்ளது. கட்சி விதிகளில் எங்கெல்லாம் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் சொற்கள் இடம் பெற்று இருந்ததோ, அங்கெல்லாம் பொதுச்செயலாளர் என மாற்றப்பட்டுள்ளது.

கட்சி விதிகள் திருத்தத்திற்கு முன் அடிப்படை உறுப்பினர் கூட பொதுச்செயலாளருக்கு போட்டியிட முடியும். ஆனால் அந்த விதி தற்போது திருத்தப்பட்டு உள்ளது. தலைமை கழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என மாற்றப்பட்டு உள்ளது. 10 மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை அவசியம் என மாற்றப்பட்டு உள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே முடியும் என்ற அளவில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. பொதுக்குழு கூட்டம் உரிய நபரால் கூட்டப்படவில்லை என சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார்' என பல்வேறு கேள்விகளையும் தனி நீதிபதி எழுப்பி உள்ளதையும் சுட்டிக்காட்டி வாதிட்டார்.

தள்ளிவைப்பு

கோர்ட்டு அலுவலை தாண்டி மாலை 4.30 மணிக்கு முன் வைத்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு தள்ளிவைப்பதாகவும், அனைத்து தரப்பினரும் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மேலும் இந்த விவகாரத்தில் கட்சியின் நலனை பார்ப்பதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் நலனை பார்ப்பதா? என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.


Next Story