ஆட்டோவில் கடத்திச் சென்று இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்...!
ஆந்திராவில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த சந்திரகிரி தொண்டை வாடா வனப்பகுதிக்கு நேற்று இரவு ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை கடத்தி வந்து ஆட்டோவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டார். இருப்பினும் அவர்கள் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அப்போது அவர்களிடமிருந்து தப்பித்த இளம்பெண் முக்கொடி கோவில் அருகே பாதுகாப்பு பணியிலிருந்த காவலாளியிடம் சென்று தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவித்தார். காவலாளி உடனடியாக 100 எண்ணிற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் 4 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடி தலைமறைவானார்.
வனப்பகுதிக்குள் தப்பி ஓடியவர்களை போலீசார் இரவு முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து இளம்பெண் சந்திரகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ பதிவு எண்ணை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.