மைசூரு காகித ஆலையை தனியார்மயம் ஆக்குவது குறித்து ஆலோசனை


மைசூரு காகித ஆலையை தனியார்மயம் ஆக்குவது குறித்து ஆலோசனை
x

பத்ராவதியில் உள்ள மைசூரு காகித ஆலை தனியார்மயம் ஆக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

மின் கட்டண பாக்கி

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள மைசூரு காகித ஆலை குறித்து தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் தனது துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பத்ராவதி எம்.எல்.ஏ. சங்கமேஸ்வர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர் பேசியதாவது:-

பத்ராவதியில் உள்ள மைசூரு காகித ஆலை மோசமான நிலையில் உள்ளது. அந்த ஆலையின் கடன், மின் கட்டண பாக்கி, அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தலைமை செயலாளர் வந்திதா சர்மா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். அந்த ஆலை தற்போது ரூ.1,402 கோடி கடனில் சிக்கியுள்ளது. அத்துடன் ரூ.229 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளது.

தனியார்மயம்

கர்நாடக அரசு அந்த ஆலைக்கு கடந்த 2010-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.850 கோடி கடன் கொடுத்துள்ளது. இந்த ஆலையை தொடர்ந்து நடத்த நிதி உதவி தேவைப்படுகிறது. அதை

தனியார்மயம் ஆக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும். அந்த ஆலையின் பகுதியில் 23 ஆயிரம் எக்டேர் நிலங்கள் உள்ளன. அங்கு நீலகிரி உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

அந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு துறைகளில் பணி வாய்ப்பும் வழங்கப்படுகிறது. சிலருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அங்கு தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 250 வன காவலர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து ஒரு திட்ட அறிக்கையை அதிகாரிகள் தயாரிக்க வேண்டும்.

இவ்வாறு எம்.பி.பட்டீல் பேசினார்.

கூட்டத்தில் தொழில்துறை முதன்மை செயலாளர் செல்வகுமார், சிவமொக்கா மாவட்ட கலெக்டர் செல்வமணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story