சப்பாத்தியுடன் பால் சேர்த்து சாப்பிடுவதில் பிரச்சினை; கணவன் தற்கொலை செய்த சிலமணி நேரங்களில் மனைவியும் தற்கொலை
சப்பாத்தியுடன் பால் சேர்த்து சாப்பிடுவதில் எழுந்த பிரச்சினையில் கணவன் விஷம் குடித்துள்ளார்.
டெல்லி,
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுஷாந்த் கோஷ் (25). இவரது மனைவி ஜூஹி (வயது 22). தம்பதி டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள ஷும்மா என்ற கிராமத்தில் தங்கியுள்ளனர். சுஷாந்த் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு ஜூஹி சப்பாத்தியுடன் பால் சேர்த்து சாப்பிடவேண்டுமென தனது கணவர் சுஷாந்திடம் கூறியுள்ளார். இதையடுத்து, சுஷாந்த் கடைக்கு சென்று பால் பாக்கெட் வாங்கி வந்துள்ளார்.
அப்போது, கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரவு 10 மணியளவில் சுஷாந்த் விஷம் குடித்துள்ளார்.
இதையடுத்து, சுஷாந்தை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் சுஷாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கணவர் சுஷாந்த் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி ஜூஹி-க்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜூஹி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இரவே ஜூஹியும் வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வீட்டில் பிணமாக கிடந்த ஜூஹி-யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உணவு உண்ணும்போது சப்பாத்திக்கு பால் வாங்கி கொண்டு கொடுத்தபோதும் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? என்பது குறித்தும் கணவன் - மனைவி விஷம் குடித்தது தற்கொலை செய்துகொண்டது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.