கர்நாடகத்தில் மக்களின் கஷ்டங்களை தீர்க்க காங்கிரஸ் தயார்


கர்நாடகத்தில் மக்களின் கஷ்டங்களை தீர்க்க காங்கிரஸ் தயார்
x

கர்நாடகத்தில் மக்களின் கஷ்டங்களை தீர்க்க காங்கிரஸ் தயாராக உள்ளதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

காங்கிரஸ் அலுவலகம்

பாகல்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு அந்த அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

நான் நகர வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்தபோது பாகல்கோட்டையில் காங்கிரஸ் அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கி கொடுத்தேன். இன்று (நேற்று) இந்த அலுவலகத்தை திறந்து வைக்கிறேன். சட்டசபை தேர்தல் வருகிறது. இதற்கு நாம் தயாராக வேண்டும். மத்திய-மாநில பா.ஜனதா அரசுகளின் தோல்வியை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். கர்நாடகத்தில் கொரோனாவால் 4½ லட்சம் பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த அரசு அவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை.

மருத்துவ உபகரணங்கள்

இந்த பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தி இருக்கிறோம். கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல், அரசு திட்டங்களில் 40 சதவீத கமிஷன், பணி நியமனத்திற்கு

லஞ்சம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. அரசு பணி நியமனங்களிலும் ஊழல் நடந்துள்ளது. இதை எல்லாம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ரூ.5 கோடி வரை லஞ்சம் வாங்குகிறார்கள்.

மந்திரி பதவிக்கு ரூ.100 கோடி, முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி வழங்க வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா யத்னால் எம்.எல்.ஏ.வே கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த இந்த அரசுக்கு தைரியம் உள்ளதா?. மக்களின் கஷ்டங்களை தீர்க்க காங்கிரஸ் தயாராக உள்ளது. நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.


Next Story