மணிப்பூரை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு கொடுமை... பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு


மணிப்பூரை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு கொடுமை... பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
x

மேற்கு வங்காளத்தில் 2 பழங்குடி பெண்களின் ஆடைகளை களைந்து, அடித்து, கொடுமைப்படுத்தி உள்ளனர் என ஆளும் அரசை இலக்காக கொண்டு பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது.

கொல்கத்தா,

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு எதிரான வன்முறையால் பலர் பலியாகி உள்ள நிலையில், குகி பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், மேற்கு வங்காளத்தில் 2 பழங்குடி பெண்களின் ஆடைகளை களைந்து, நிர்வாணப்படுத்தி அவர்களை அடித்து, கொடுமைப்படுத்தி உள்ளனர் என பா.ஜ.க. குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி, பா.ஜ.க.வின் தகவல் தொழில் நுட்ப துறை தலைவர் அமித் மாளவியா டுவிட்டரில் இன்று வெளியிட்டு உள்ள பதிவு ஒன்றில், மால்டா மாவட்டத்தின் பமன்கோலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு வார சந்தையில் பகுவா ஹேட் என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

அதில், 2 பழங்குடி பெண்களின் ஆடைகளை களைந்து, அடித்து, இரக்கமின்றி கொடுமைப்படுத்தி உள்ளனர். ஆனால், போலீசார் கண்டும் காணாதது போன்று இருந்துள்ளனர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறி விட்டது என குற்றச்சாட்டாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி துறை மந்திரியான ஷஷி பஞ்சா கூறும்போது, இதனை அரசியலாக்க வேண்டிய தேவையே இல்லை. அது ஒரு திருட்டு வழக்கு.

அந்த பெண்கள் இருவரும் சந்தையில் திருட முயன்றனர். இதனை மற்றொரு பெண்கள் குழு கவனித்து, சட்டம் மற்றும் ஒழுங்கை தங்களது கைகளில் எடுத்து கொண்டு, அவர்களை அடிக்க தொடங்கினர்.

எனினும், போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறியுள்ளார்.


Next Story